×

பொங்கல் பண்டிகையையொட்டி மண் பானைகள் விற்பனைக்கு குவிப்பு

ஈரோடு, ஜன. 4: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தமிழ் மாதம் தை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் மண் பானையில் பொங்கல் வைப்பதை மக்கள் விரும்பி வருகின்றனர். இதனால், மண் பானைகள், மண் அடுப்பு போன்றவை பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோட்டில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மண் பானை விற்பனை செய்யும் பெண் வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஆண்டு முழுவதும் மண் பானை, அடுப்பு, குழம்புக்கான சிறிய பானை, தயிர் வைக்க சிறிய சட்டிகள், மண்ணால் செய்யப்பட்ட டம்ளர், அழகுக்கான மண் பாண்டங்களை விற்பனை செய்கிறோம்.

இந்தாண்டு பொங்கல் விழாவுக்காக, திருச்சி, கிருஷ்ணகிரி தர்மபுரி போன்ற மாவட்டங்களில் பகுதியில் இருந்து மண் பானைகளை வாங்கி வந்து விற்பனைக்கு குவித்துள்ளோம். மண் பானைகளை வர்ண கோலமிட்டு அழகுபடுத்தி விற்பனை செய்கிறோம். அதற்காக தற்போது பானைகளில் வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். வர்ணம் தீட்டப்பட்ட பானைகள் அதன் அளவுக்கு தகுந்தாற்போல் ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனை செய்கிறோம். அதேபோல், வர்ணம் தீட்டப்படாத பானை சிறிய வகை பானை ரூ.150 முதல் ரூ.450 வரை விற்பனைக்கு வைத்துள்ளோம். மண் அடுப்பு ரூ.160 ரூபாய் முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், வரக்கூடிய நாட்களில் மண் பானைகள் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : occasion ,festival ,Pongal ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா