×

புனரமைப்பு பணிகள் முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத பூங்கா: கொத்தவால்சாவடி மக்கள் ஏமாற்றம்

தண்டையார்பேட்டை: கொத்தவால்சாவடி பகுதியில் புனரமைக்கப்பட்ட பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் பூட்டியே கிடப்பதால், சமூக விரோதிகள் கூடாரமாக மாறி வருகிறது. சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்துக்கு உட்பட்ட மண்ணடி பிரகாசம் சாலை - அண்ணா பிள்ளை தெரு சந்திப்பில் பழமைவாய்ந்த பூங்கா உள்ளது. மெட்ரோ ரயில் பணி காரணமாக மூடப்பட்ட இந்த பூங்கா, மெட்ரோ ரயில் பணி முடிந்து பின்னர் மீண்டும் புனரமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்காமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்ய முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

மேலும், வயதான முதியவர்கள், குழந்தைகள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கொத்தவால்சாவடி பகுதி மக்களுக்கு இந்த ஒரு பூங்கா மட்டும் தான் உள்ளது. நடைபயிற்சி செய்ய ஏராளமானோர் இதை பயன்படுத்தி வந்தனர். தற்போது, பூங்கா புனரமைக்கப்பட்டும், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் கஞ்சா அடிக்கவும், மது குடிப்பதற்கும் இந்த பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : park ,completion ,Kottavalsavadi ,
× RELATED தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்