×

ஜன.15 பென்னிகுக் பிறந்த நாள் மணிமண்டபத்தை திறக்க கோரிக்கை

கூடலூர், ஜன. 4: ஜன.15ல் பென்னிகுக் பிறந்தநாளையொட்டி, லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக்கை நினைவுகூரும் வகையில், கம்பம் அருகே, கூடலூர் நகராட்சி 21வது வார்டு லோயர்கேம்பில் ரூ.1.25 கோடியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு பென்னிகுக்கின் முழு உருவச்சிலை, பெரியாறு அணை மாதிரி, அணை குறித்த  புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மணிமண்டபத்தை 2013 ஜன.15 பென்னிகுக்கின் பிறந்தநாளன்று, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமண்டபத்தை சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் தினசரி பார்வையிட்டு வந்தனர். கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் மாத இறுதியில் மணிமண்டபம் மூடப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வால் வைகை அணை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், பென்னிகுக் மணிமண்டபத்தை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வருகிற ஜன.15ல் பென்னிகுக் பிறந்தநாளை முன்னிட்டு, மணிமண்டபத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கம்பம் ரஞ்சித்குமார் கூறுகையில், ‘முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுக்கை பெருமைப்படுத்த மணிமண்டபம் கட்டப்பட்டது. கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த 9 மாதமாக பூட்டப்பட்டுள்ளது. ஜன.15ல் பென்னிகுக் பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி நூற்றுக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் மணிமண்டபத்திற்கு வந்து பொங்கல் வைத்து, அவரது சிலைக்கு மரியாதை செய்வர். எனவே, மணிமண்டபத்தை திறக்க மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும்’ என்றார்,

Tags : birthday mansion ,Penny ,
× RELATED ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை,...