×

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் இரவு பத்து விழா நிறைவு

திருப்புத்தூர், ஜன.4: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்று வந்த இரவு பத்து விழா நேற்றுடன் நிறைவடைந்தது. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவத்தில் பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி உற்சவம் 20 நாட்கள் நடைபெறும். கடந்த டிச.15ம் தேதி காலை பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி காப்புக்கட்டப்பட்டு, பகல் பத்து உற்சவம் துவங்கியது. டிச.25ல் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பெருமாள் சயனத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சிளித்தார். இந்த அலங்காரம் வருடம் ஒரு முறை மட்டுமே நடைபெறும்.

அன்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, தங்கப் பல்லக்கில் பெருமாள் தேவி, பூதேவியருடன் பரமபத வாசலைக் கடந்து சென்று அருள்பாலித்தார். தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் எழுந்தருளி காப்புக்கட்டப்பட்டு இரவுப்பத்து உற்சவம் துவங்கியது. இரவுப்பத்தில் தினசரி மாலை 6 மணிக்கு மேல் பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தென்னமரவீதி புறப்பாடாகி தயார் சன்னிதியில் எழுந்தருளல் நடைபெற்றது. 10ம் திருநாளான நேற்று காலை 10 மணியளவில் சொர்க்கவாசல் திறந்து, ஏகாதசி மண்டபத்தில் பத்தி உலாத்தல் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தாயார் சன்னதி எழுந்தருளி விசேஷ பூஜைகள் நடைபெற்று காப்பு அவிழ்க்கப்பட்டது. மாலை ஆழ்வார் திருவடி தொழுதலும், விஷேச பூஜைகளும் முடிந்த பின்னர் இரவு ஆஷ்தானம் எழுந்தருளல் நடைபெற்று இரவு பத்து உற்சவம் பூர்த்தியடைந்தது.

Tags : night festivities ,Thirukkoshtiyur Perumal Temple ,
× RELATED திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில்...