கடலாடி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல் சுகாதாரத்துறை கவனிக்குமா?

சாயல்குடி, ஜன.4: கடலாடி பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமங்களில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சாயல்குடி அருகே கன்னிராஜபுரம், நரிப்பையூர் முதல் வாலிநோக்கம் வரையிலான 10க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் மற்றும் கடலாடி பகுதியிலுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். கை, கால் மூட்டு வலி, உடல் வலி, தலை சுற்றல், சளி, வாந்தியுடன் கூடிய காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இதனால் அரசு மருத்துவமனைகள் மட்டுமில்லாது தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

எனவே சுகாதாரத்துறை கடலாடி யூனியனில் உள்ள 60 பஞ்சாயத்துகளிலுள்ள, அனைத்து கிராமங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கடலாடி பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மருத்துவர் ஒருவர் கூறும்போது, ‘தொடர்மழை, பனிபொழிவு காரணமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி வந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். டெங்கு போன்ற விஷகாய்ச்சல் இல்லை. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றார்.

Related Stories:

>