எந்த திட்டமும் செய்யாமல் தொகுதி பக்கமே வராத கருணாஸ் கடும் அதிருப்தியில் மக்கள்

தொண்டி, ஜன.4: திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கருணாஸ், இதுவரையிலும் தொகுதி பக்கமே வராததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புலிப்படை சார்பில் திருவாடானை தொகுதியில் நடிகர் கருணாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று முதல் இன்று வரை தொகுதியின் சில இடங்களுக்கு நன்றி சொல்ல கூட வர வில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். திருவாடானை பகுதியில் தொண்டியை மையமாக வைத்து ஆர்டிஓ அலுவலகம் திறப்பது, பொறியியல் கல்லூரி திறப்பது, தொண்டி கடலில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைப்பது என பல வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் ஒன்று கூட செய்யவில்லை.

தொகுதியின் ஒரு சில இடங்களில் சாலை வசதி கூட சரியாக இல்லை. இதை கூட சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் திருமண விழாக்களில் மட்டுமே இவரை பார்க்க முடிகிறது என பொதுமக்கள் புலம்புகின்றனர். குறிப்பாக நம்புதாளை அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் கட்டிடமும்,  உயர் நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவரும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டித்தர கோரி பொதுமக்கள் சார்பில் பல மனு கொடுக்கப்பட்டது. ஆனால் எவ்வித பயனும் இல்லை. இதேபோல் தொண்டியில் போக்குவரத்து பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து ஜமாத் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

அதுவும் கிடப்பில் போடப்பட்டது. எம்எல்ஏ என்ற முறையில் இவரை சந்திப்பதே பெரிய விசயமாகிவிட்ட நிலையில், கோரிக்கை மட்டும் எப்படி சரி செய்யப்படும் என பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் அரசுக்கு நெறுக்கடியை கொடுக்கும். தொண்டி காளிதாஸ் கூறியது,‘‘தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு திட்டங்களை கருணாஸ் அறிவித்தார். ஆனால் அதில் ஒன்று கூட செய்யவில்லை. பணிமனை திட்டம், மீன்பிடி துறைமுகம் உள்ளிட்டவை தொண்டி பகுதிக்கு முக்கிய தேவையாகும். நீண்டகால கோரி்ககை நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. 5 வருடத்தில் எவ்வித பயனும் இல்லை’’என்றார். 

Related Stories:

>