×

பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.2 கோடியில் அலங்கார கற்கள் பதிப்பு நிதி வீணடிப்பதாக குற்றச்சாட்டு

பரமக்குடி, ஜன.4:  பரமக்குடி நெடுஞ்சாலை துறை மூலம் சாலை ஓரங்களில் பதிக்கப்படும் அலங்கார கற்கள் பதிக்கும் பணி முறையான திட்டமிடுதல் இல்லாததால், அரசு நிதியை நெடுஞ்சாலைத் துறையினரால் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பரமக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பரமக்குடி நகர் பகுதியில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றது. இதனால், கடுமையான போக்குவரத்து ஏற்பட்டதால், மதுரை முதல் பரமக்குடி வரையில், மத்திய அரசாங்கத்தின் மூலமாக நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது. இதனால், பரமக்குடி நகர் பகுதிக்கு செல்லும் 10 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, பரமக்குடி நகர்  பகுதிக்குள் செல்லும் தெளிச்சத்தநல்லூர் முதல் சரஸ்வதி நகர் வரை சாலையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, ஓட்டபாலம் முதல் 5 முனைச்சாலை வரை ரூ.2 கோடி செலவில், சாலையின் இருபுறங்களிலும் 10 அடிக்கு அலங்கார கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீர் செல்வதற்கு முறையான திட்டமிடுதல் வாறுகால் அமைக்கப்படாமல், கற்கள் பதிக்கும் கீழ்ப்பகுதியில் குடிநீர் குழாய், டெலிபோன் லைன் செல்லும் நிலையில், பிற்காலத்தில் அலங்கார கற்களை சேதப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. மேலும், அலங்கார கற்கள் பகுதியில் மின் கம்பங்கள் உள்ளது. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் வருபவர்கள் மோதி உயிர்பலி வாங்கும் நிலை உள்ளது. முறையான திட்டமிடுதல் இல்லாமல், சாலையோரங்களில பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சாலையோரங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஏற்கனவே, சாலையின் இடதுபுறத்தில் ஒட்டப்பாலம் முதல் ஐந்து முனை சாலை வரை, பல லட்சங்களை செலவு செய்து வாறுகால் அமைக்கப்பட்டு எந்த பயனும் இல்லை. இந்நிலையில், மீண்டும் திட்டமிடுதல் இல்லாமல் அலங்காரங்கள் பதிப்பது அரசு நிதியை வீணடிக்கும் செயலாக உள்ளது. ஏற்கனவே ஐந்துமுனை முதல் பேருந்து நிலையம் வரை இருபுறங்களிலும் வாறுகாலுடன்  நடைபாதை அமைக்கப்பட்டு பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல், சாலையோர வியாபாரிகள் முற்றிலும் ஆக்கிரமித்து கடைகளையும், வாகனங்களையும் நிறுத்தியுள்ளனர். முறையான திட்டமில்லாமல், அரசினுடைய நிதியை வீணடிக்கும் விதமாக நெடுஞ்சாலைத் துறையினர் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சாலையின் இருபுறங்களிலும் அலங்கார கற்கள் பதிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், மழைநீர் செல்வதற்கு வாறுகால் அமைக்கப்படாமல் பணியை மேற்கொள்வது எந்த பயனும் அளிக்காது. அலங்கார கற்கள் பதிக்கும் கீழ்ப்பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் டெலிபோன் லைன்கள் சேதமடைந்தால், அலங்கார கற்களை எடுக்கவேண்டிய நிலை உள்ளது. மேலும், அலங்கார கற்கள் வாறுகால் அமைத்து நடைபாதை பகுதிகளில் வியாபாரிகளும் ஆக்கிரமித்து பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. ஆகையால், முறையான திட்டமிடுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags : Paramakudi National Highway ,
× RELATED பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அசுர...