×

மதுரையில் குரூப் 1 தேர்வில் 7,170 பேர் ஆப்சென்ட்

மதுரை, ஜன. 4: மதுரையில் குரூப் 1 தேர்வை 8,191 பேர் எழுதினர். 7,170 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் தமிழக அரசில் காலியாக உள்ள துணை காவல்கண்காணிப்பாளர் 16, வணிகவரித்துறை உதவி ஆணையர் 10, கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் 14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் 4, மாவட்ட தீயணைப்பு அதிகாரி உள்ளிட்ட 66 குருப் 1 பணியிடங்களுக்கு நேற்று முதன்மைத்தேர்வு நடந்தது.
மதுரை மாவட்டத்தில் இத்தேர்வு எழுத 15,361 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுகள் மீனாட்சி கல்லூரி, யாதவா கல்லூரி உள்ளிட்ட மதுரை நகர், புறநகர் என 51 கல்விநிலையங்களில் நடந்தது.

காலை 10 மணி முதல் 1 மணி வரை நடந்த இத்தேர்வை 8,191 பேர் மட்டுமே எழுதினர். 7,170 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத ேதர்வு மையத்திற்குள் காலை 9 மணி முதல் 9.15 மணிக்குள் ேதர்வர்கள் வந்து விட வேண்டும். அதற்கு மேல் தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதியில்லை என ஏற்கனவே நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி, சில தேர்வர்கள் காலதாமதமாக வந்தனர். அவர்களை மையத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
மதுரையில், நாராயணபுரம் உள்ளிட்ட ஓரிரு இடங்களில் 9.15 மணிக்கு மேல் வந்த தேர்வர்கள் சிலர் தங்களை உள்ளே விட அனுமதி கோரினர். உள்ளே விட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், தேர்வர்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பின்பு போலீசார் பேச்சுவர்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

தேர்வர்கள் பெயர், தேர்வு எண், கையெழுத்து, கோடிங்சீட்டில், கைரேகை பதிவு உள்ளிட்ட பணிகளை 9.30 மணிக்குள் முடித்துக்கொண்டு, சரியாக 10 மணிக்கு தேர்வு ஆரம்பித்தது. மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது. அதன்பின்பு, எத்தனை வினாவுக்கு பதில் எழுதப்பட்டது என்பதனை எண்ணிக்கை செய்து அதனை பதிவு செய்ய 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இந்த நடைமுறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிக்க மாவட்ட துணை கலெக்டர்கள் தலைமையில், 7 பறக்கும்படை குழுவினர் போடப்பட்டு கண்காணித்தனர். மேலும் தேர்வு மையத்தை கலெக்டர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன் ஆகியோர் கண்காணித்தனர்.

Tags : examination ,Group 1 ,Madurai ,
× RELATED 90 காலி பணியிடங்களுக்கான குரூப் -1 தேர்வு அறிவிப்பு: எப்போது தெரியுமா?