×

புதர் மண்டிக்கிடக்கும் துவரிமான் கண்மாய் குடிமராமத்து இல்லாததால் 800 ஏக்கர் விவசாயம் பாதிப்பு

சோழவந்தான், ஜன. 4: மது ரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வைகையாற்று தடுப்பணையிலிருந்து தென்கரை, மேலக்கால், கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், துவரிமான், மாடக்குளம் வழியாக நிலையூர் வரை பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் புல்லூத்து அருகே உள்ள மொட்டக்கலுங்கு என்ற மடை வழியாக கிளை கால்வாய் பிரிந்து, சுமார் ஒரு கி.மீ தூரத்தில் துவரிமான் மற்றும் மாடக்குளம் கண்மாய்களுக்கு இரு மடைகள் வழியாக, இரு சிறிய கால்வாய்கள் பிரிந்து தண்ணீர் செல்கிறது. இதன்படி சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள துவரிமான் கண்மாய் மூலம் இப்பகுதியில் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுவதுடன், இப்பகுதி குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் மொட்டக்கலுங்கு மடை அருகே நிலையூர் கால்வாயில் சுமார் 40 அடி அகலம், 500 அடி நீளத்தில் பெரிய அளவில் பள்ளம் இருப்பதாலும், கிளை கால்வாய் சற்று மேடாக இருப்பதாலும் குறைவான தண்ணீர் மட்டுமே செல்ல முடிகிறது.

ஆனால், பெரிய கால்வாயில் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் செல்கிறது. கிளை கால்வாயில் வெளியேறும் தண்ணீர் இரு பெரிய மடைகளில் மாடக்குளம் கண்மாய்க்கு செல்லும் நிலையில், ஒரு மடை வழியாக துவரிமான் கண்மாய்க்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதனால் துவரிமான் கண்மாய்க்கு உரிய நீர் வராமல் அரை நூற்றாண்டுகளுக்குப் மேலாக நிரம்பாமல், அதிக அளவு புதர் மண்டிக் கிடப்பதால் விவசாயம் செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் பலனில்லை என புலம்பும் விவசாயிகள் பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து துவரிமான் விவசாயி அய்யாவு குமரவேல் கூறுகையில், ``சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள துவரிமான் கண்மாயின் நடுவே தற்போது நான்கு வழிச்சாலைக்காக சுமார் 50 ஏக்கர் காலியானதால், 250 ஏக்கர் அளவில் சுருங்கி விட்டது. இதுவும் நிரம்ப வேண்டும் என்றால், மொட்டக்கலுங்கு அருகில் கால்வாயில் உள்ள பெரிய பள்ளத்தை சுமார் மூன்று அடி அளவு கான்கிரீட் கலவை மூலம் உயர்த்தினால் தான் கிளை கால்வாயில் தண்ணீர் மேலேறிச் செல்லும். அக்கால்வாயிலும் மாடக்குளம் கண்மாய்க்கு இரு பெரிய மடைகள் வழியாக அதிக அளவும், துவரிமான் கண்மாய்க்கு ஒரு சிறிய மடை வழியாக மிகக் குறைந்த அளவும் தண்ணீர் வருகிறது.

இதனால் பல கன்மாய்கள் நிரம்பிய போதும், துவரிமான் கண்மாயில் சிறு குட்டை அளவே தண்ணீர் உள்ளது. மேலும் முறையான குடி மராமத்து பணிகள் நடைபெறாததால் அதிக அளவு புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் சுமார் 60 ஆண்டுகளாக கண்மாய் முழுவதும் நிரம்பி விவசாய பணிகள் நடைபெறவில்லை. எனவே, கால்வாய் பள்ளத்தை உயர்த்தி, கால்வாய், கண்மாய் பகுதிகளில் முறையான தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு விவசாயம் செழிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் நடவடிக்ைக எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...