விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை கொரோனா வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் மேலூரில் ஆயிரம் ஏக்கர் கரும்பு தேக்கம்

மேலூர், ஜன. 4: மதுரை மாவட்டம் மேலூர் பகுதி பெரியாற்று கால்வாய் பாசனத்தை நம்பி உள்ள பகுதியாகும். இப்பகுதியில் நெல், வாழை, செங்கரும்பு, ஆலை கரும்பு அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. செம்மண் பகுதியான இப்பகுதியில் விளையும் கரும்புகள் 6 முதல் 8 அடி உயரம் வளர்வதுடன், தடிமனுடன் நல்ல இனிப்பு சுவையும் காணப்படும். இதனால் இக்கரும்பு தமிழகம் மட்டுமல்ல, ஆந்திரா, கேரளா, குஜராத், மும்பை பகுதிகளுக்கும் ஆண்டு தோறும் அனுப்பப்படும். இதற்காக இரு மாதத்திற்கு முன்பே வியாபாரிகள் மேலூரில் முகாமிட்டு, விவசாயிகளிடம் விளை நிலத்திற்கு சென்று வயலில் உள்ள கரும்பின் தன்மைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து, முன் பணம் கொடுத்து விடுவார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா ஆண்டாக மாறி விட்டதற்காக மற்ற பணிகள் முடங்கினாலும், விவசாய பணிகள் நிற்கவில்லை. ஒவ்வொரு ஆண்டு போல், கரும்பிற்கு மாதந்தோறும் தோகை பராமரித்தல், களை எடுத்தல், உரம் வைத்தல் போன்ற பணிகள் நடைபெற்றது. ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவு செய்துள்ளனர். கொரோனா அச்சம் ஓரளவு குறைந்திருந்தாலும், வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் கரும்பை ஏற்றி அனுப்புவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், வியாபாரிகள் கரும்பை கொள்முதல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் மேலூர், பல்லவராயன்பட்டி, எட்டிமங்கலம், கீழையூர், தனியாமங்கலம், சருகுவலையபட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் கரும்புகள் விலையின்றி வயலில் உள்ளது.

கடந்த ஆண்டு 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 250 முதல் ரூ.300 வரை விலை போன நிலையில் இந்த ஆண்டு ரூ.200 வரை மட்டுமே விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு லாரியில் 300 கட்டு ஏற்றப்படும் நிலையில் கடந்த ஆண்டு வரை ரூ.75 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் மட்டுமே லாரி கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலை கிடைக்காமல் மேலூர் பகுதி கரும்பு விவசாயிகளை இந்த கொரோனா காலம் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>