சேலம்: வாழப்பாடி அருகே தந்தை, மகன் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் மோதிய விவகாரத்தில், ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் உட்பட 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சேலம் எஸ்பி ஆபீசில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடுகத்தம்பட்டியை சேர்ந்தவர் சத்யராஜ் (45). இவர் ராமதாஸ் அணி பாமகவின் தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது தந்தை தர்மராஜ் (70), நேற்றுமுன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சியில் அருள் எம்எல்ஏ கலந்து கொண்டுவிட்டு திரும்பும்போது, வடுகத்தம்பட்டி பகுதிக்கு வந்தபோது, அன்புமணி தரப்புக்கும், ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருதரப்பும் மாறி மாறி கல்வீசியும், ஆயுதங்களால் தாக்கியும் கொண்டனர். இந்த மோதல் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அன்புமணி தரப்பை சேர்ந்த சின்னகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பூவிழிராஜா(33), விமல்ராஜ் (22), தமிழ்ச்செல்வன்(29), வடுகத்தம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ்(25), தென்னங்குடி பாளையத்தைச் சேர்ந்த ஆத்தூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடேசன்(37), வாழப்பாடி செல்லியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சரவணன்(30), வைத்தியகவுண்டன்புதூர் அருள்மணி(32) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும், அருள் எம்எல்ஏவை கைது செய்யக்கோரியும் அன்புமணி ஆதரவு பாமகவை சேர்ந்த, எம்எல்ஏக்கள் சதாசிவம் (மேட்டூர்), சிவக்குமார் (மயிலம்), செஞ்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், சேலம் எஸ்பி அலுவலக நுழைவு வாயிலில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இந்த மோதல் விவகாரம் தொடர்பாக வாழப்பாடி, ஏத்தாப்பூர் காவல்நிலையங்களில் அருள் எம்எல்ஏ மற்றும் அவருடன் வந்தவர்கள் குறித்து அன்புமணி தரப்பை சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் அருள் எம்எல்ஏ மற்றும் அவருடன் இருந்த 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அருள் எம்எல்ஏ ஆதரவாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் அன்புமணி தரப்பை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் மொத்தம் 60 பேர் மீது கொலை முயற்சி, ஆயுதங்கள் கொண்டு தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொதுவெளியில் மோதல் போக்கை கடைபிடித்தல் என்பது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* அந்த சாக்கடை பாமக எம்எல்ஏ கிடையாது: அன்புமணி காட்டம்
தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சேலம் அருள், பாமக சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். திரும்ப திரும்ப பாமக சட்டமன்ற உறுப்பினர் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். அந்த சாக்கடை பற்றி கேள்வி கேட்க வேண்டாம். அந்த சாக்கடை பற்றி நான் எதுவும் சொல்வது கிடையாது. எவனோ சொல்லிட்டு போகட்டும். இன்னும் ஒருசில வாரங்களில் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும்’ என்றார்.
* எங்களுக்கு ஒன்றிய அரசு சப்போர்ட் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ
அன்புமணி ஆதரவு எம்எல்ஏ மேட்டூர் சதாசிவம் கூறுகையில், ‘‘கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் வழக்கில் சிபிஐ போட்டமாதிரி, இதற்கும் உடனடியாக சிபிஐ போட வேண்டும். எங்களுக்கு ஒன்றிய அரசு இருக்கிறது. அதில் தான் அங்கம் வகித்து இருக்கிறோம். போலீசார் அருள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் அல்லது ஏழு பேரை விடுவிக்க வேண்டும். எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எடுக்க வைப்போம்,’’ என்றார்.
* அநாகரீக அரசியலை அன்புமணி நடத்துகிறார்L ராமதாஸ் மகள்
மோதலில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ராமதாஸ் மகளும், பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: காயமடைந்தவர்களை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. காவல்துறையினர் கடுமையாக தண்டனை பெற்று தர வேண்டும். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். ராமதாஸ் நாகரீகமான அரசியலை சொல்லி கொடுத்தார். ஆனால் அன்புமணி அநாகரீக அரசியலை நடத்தி வருகிறார். கொலை செய்வேன், வெட்டுவேன் என கூறி இருக்கிறார்கள். அருள் எம்எல்ஏவை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
