கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம் ஆபாச படத்தை வெளியிடுவேன் என மிரட்டிய நெல்லை வாலிபர் கைது

மணப்பாறை, ஜன.4: திருச்சி அருகே கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் அவரது காதலனான நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாடு அருகே உள்ள வேம்பனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி(19). இவர் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 29ம் தேதி பாக்கியலட்சுமி தனது வீடு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் “பெண் பெயரில் செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் ஆணின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு, என் சாவுக்கு காரணமான இவனை விட்டுவிடாதீர்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், ஷேர் ஷாட் மூலம் பாக்கியலட்சுமி அந்த வாலிபருடன் பழகி காதலித்ததும், பின்னர் அந்த வாலிபருடன் பழகுவதை பாக்கியலட்சுமி நிறுத்தியதும், இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பாக்கியலட்சுமியின் ஆபாச காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியதும், இதன் காரணமாகவே பாக்கியலட்சுமி தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில், கல்லூரி மாணவி தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்குரிய வாலிபர் நெல்லை மாவட்டம், துளுக்கரைபட்டியை சேர்ந்த ராமராஜ்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை வளநாடு போலீசார் கைது செய்தனர். மேலும் வாட்ஸ்அப் காலில் பாக்கியலட்சுமி பேசியதை அவருக்கு தெரியாமல் ஸ்கிரீன் சாட் எடுத்து மிரட்டியதாக பிடிபட்ட ராமராஜ் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories:

>