×

திருச்சியில் சாரல் மழை முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை பயன்படுத்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க அழைப்பு


திருச்சி, ஜன.4: திருச்சி மாவட்டத்தில், வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை, முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை பயன்படுத்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் (தொழில் முனைவோர்) திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளியில் கலந்துகொண்டு பயன்பெறலாம். தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் பழங்கள் மற்றும் காய்கறிகளின் தரத்தினை உயர்த்தி சந்தையில் அதிக விலை கிடைக்கும் பொருட்டு, விநியோகத்தொடர் மேலாண்மை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 6 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் வாழைக்காகவும், 5 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் வெங்காயத்திற்காவும் நிறுவப்பட்டு, தற்போது மண்ணச்சநல்லூர், எம்.புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு வாழை முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், தா.பேட்டை, உப்பிலியபுரம் (தெற்கு), பி.கே.அகரம் ஆகிய இடங்களில் உள்ள வெங்காயம் முதன்மை பதப்படுத்தும் நிலையங்களுக்கும், பிடாரமங்களம், அரசலூர் ஆகிய இடங்களில் உள்ள வாழை முதன்மை பதப்படுத்தும் நிலையங்களுக்கும், தகுதி வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்ய விருப்பமுள்ள தனியார் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு (தொழில் முனைவோர்) ஒப்பந்தம் செய்வதற்கென திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி வரும் 20ம் தேதி ஆகும்.

இதற்கான விபரங்களை www.tenders.tn.gov.in. & www.tn.gov.in. & www.tnagrisnet.tn.gov.in. என்ற இணையதள முகவரியில் சென்று ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்களை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, சிப்பெட் ரோடு, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 அலுவலகத்திலிருந்து வரும் 19ம் தேதி வரை நேரடியாகவோ, காசோலை செலுத்தியோ பெற்றுக்கொள்ளலாம். வாழை முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் வாழை சீப்புகளை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து உலரவைக்கும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது.

குளிர்பதன கிடங்கு, பழுக்க வைக்கும் அறை, 60 மெ.டன் எடைமேடை, வாழை தரத்தினை தரம்பிரிக்கும் கருவி, அமைக்கப்பட்டுள்ளது. வெங்காயம் முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை பொறுத்தவரை வெங்காயத்தை அளவு வாரியாக தரம் பிரிக்கும் கருவி, வெங்காயம் உரிக்கும் கருவி, தானியங்கி சிப்பமிடும் கருவி, 60 மெ.டன் எடைமேடை, கிடங்கு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை செய்து தரப்படும். எனவே, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் (தொழில்முனைவோர்) இந்த வாய்ப்பினை பயன்படுத்தி திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளியில் கலந்துகொண்டு பயன்பெற்று விவசாயிகள் உரிய விலை பெறுதல் மற்றும் நல்ல வணிக வாய்ப்பை பெறுவதற்கான சேவையை வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, திருச்சி மாவட்ட துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) நேரில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : Farmer Producers ,Companies ,Saral Rain Primary Processing Stations ,Trichy ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...