துறையூர் நகராட்சியில் குண்டும், குழியுமாக குறுக்கு சாலைகள் பொதுமக்கள் அவதி

துறையூர், ஜன.4: துறையூர் நகராட்சியில் வார்டுகளில் உள்ள சிறு, சிறு குறுக்கு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையின் நடுவே குடிநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள் பழுது நீக்க குழிகள் தோண்டப்பட்டு பழுது சீர் அமைத்தவுடன் சரியான முறையில் மூடப்படாததால் குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நின்று சேரும், சகதியுமாக, குண்டும், குழியுமாக உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் திணறி வருகின்றனர். மேலும் இந்த தெரு சாலையில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பலமுறை நகராட்சிக்கு புகார் அளித்தும் கண்டுக்கொள்ளவில்லை என பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக துறையூர்-ஆத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை செல்லும் குறுக்கு சாலை மிகவும் மோசமான நிலையில் சேரும் சகதி நிறைந்து, பல்லாங்குழியாக காட்சி தருகிறது. இந்த சாலை வழியாக தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்லுகின்றனர். இதில் அவசரமாக வாகனத்தில் வரும் நோயாளிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து செல்லும் நிலையும் அரங்கேறி வருகிறது. நடந்து செல்லும் புறநோயாளிகளும் அவதியுறுகின்றனர். எனவே இந்த மாதிரியான குறுக்கு, சிறிய தெரு சாலைகளை சீரமைத்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

>