×

பந்தநல்லூர் அருகே பொதுமக்கள் எதிர்ப்பை மீறிடாஸ்மாக் கடை திறக்க முயற்சி

கும்பகோணம், ஜன.4: பந்தநல்லூர் அருகே பொதுமக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்க முயன்றதால் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு மதுக்கடையை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் ரங்கராஜபுரம் எனும் கிராமத்தில் அரசு மதுபானக்கடை கடந்த சில மாதங்கள் முன்பு கிராம மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே திறக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்துக் கட்சியினர் கடந்த 31ம் தேதி ரங்கராஜபுரத்தில் இயங்கி வரும் மதுபானக் கடை மூடும் போராட்டம் அறிவித்து அதற்காக திரண்டு வந்தனர். இதனை அறிந்த திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், டிஎஸ்பி அசோகன் தலைமையில் அதிகாரிகள் போராட்டத்திற்கு வந்தவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். டாஸ்மாக் அதிகாரிகள் வராததால் 2ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அதுவரை கடை மூடப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2ந்தேதி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அழகர்சாமி, வாட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், டிஎஸ்பி அசோகன் ஆகியோர் முன்னிலையில் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் அங்கிருந்து கடையை வேறு இடத்திற்கு மாற்ற டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அழகர்சாமி ஆறு மாத காலம் அவகாசம் கேட்டதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் “அங்கிருந்து உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், முடிவு தெரியும் வரை மூடிய கடை மீண்டும் திறக்க கூடாது என்றும் கூறிவிட்டு அனைவரும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததனர். இந்தநிலையில் நேற்று சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சிபிஎம் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், விசிக, மண்டல செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன், சி.பி.ஐ (எம்.எல்) மாவட்ட செயலாளர் கன்னையன், நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் இளங்கோவன், திமுக விவசாய அணிசெயலாளர் மாயக்கண்ணன், விசிக நிர்வாகிகள் பாலகுரு, மாரிமுத்து, முருகதாஸ், ராமச்சந்திரன், பாமக ஒன்றிய செயலாளர் கனகராஜ், தே.மு.தி.க ஒன்றிய நிர்வாகிகள் குமார், நாகராஜ், கிராம தலைவர் பழனிவேலு மற்றும் பல்வேறு அமைப்பினர் உட்பட ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் டாஸ்மாக் கடையை திறக்க யாரும் வரவில்லை. பேச்சுவார்த்தைக்கும் யாரும் அதிகாரிகள் வரவில்லை. இதனால் காலை 11 மணிமுதல் மாலை 4மணிவரை போராட்டத்தை முடித்து கொண்டு மக்கள் கலைந்து சென்றனர். மீண்டும் கடையை அதிகாரிகள் திறக்க முயன்றால் போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : store ,Miridasmac ,Bandanallur ,
× RELATED ஈரோட்டில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 25000 சேலைகள் பறிமுதல்