புரெவி புயலால் பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கு ரூ.30ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

கும்பகோணம், ஜன.4: புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் பயிலரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஊழியர் பயிலரங்கம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாரதி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், தேசியக்குழு உறுப்பினர் பழனிசாமி ஆகியோர் பயிற்சி அளித்து பேசினர். மாவட்ட நிர்வாகிகள், இடைக்குழு செயலாளர்கள் பேசினர். கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் பெயரை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்பொழுது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயல் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் குடிநீர் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

நெல்பயிர்களின் சேதத்தையும், மகசூல் இழப்பையும் முறையாகக் கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் உடனே வழங்க வேண்டும். கும்பகோணம் நகரத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் பாசன வாய்க்கால், உள்ளூர் பாசன வாய்க்கால், பழவாத்தாங்கட்டளை பாசன வாய்க்கால், பெருமாண்டி பாசன வாய்கால்களில் நீர்வழி பாதைகளை மூடி அதன் மீது ஆக்கிரமிப்பு ஏற்படுத்தபட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி நீர் தடையின்றி செல்லவும், நீலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையின் தஞ்சை காவிரி வடிநில கோட்டத்தில் பணியாற்றிவரும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரையும் உடனே நிரந்தரப்படுத்த வேண்டும். புதிய அரசாணை வெளியிடப்படும் வரை தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 7 ஒன்றியங்கள் மற்றும் கும்பகோணம் நகரத்தை சேர்ந்த கிளை செயலாளர்கள், ஒன்றியக்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பயிற்சி பெற்றனர்.

Related Stories:

>