×

சட்டவிரோதமாக பலகோடி பணப்பரிமாற்றம் செய்ததாக சென்னையில் முடி, விக் ஏற்றுமதி நிறுவன அதிபர்கள் வீடுகளில் சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது அமலாக்கத்துறை

சென்னை: வெளிநாடுகளுக்கு முடி மற்றும் விக் ஏற்றுமதி செய்ததில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக சென்னையில் தொழிலதிபர்களுக்கு சொந்தமான 5 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.  சென்னை கோயம்பேடு செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் சவுரி. தொழிலதிபரான இவர் வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். அதேபோல் நெற்குன்றம் பகுதியை சேர்ந்தலோகேஸ்வரன், வெளிநாடுகளுக்கு முடி ஏற்றுமதி செய்து வருகிறார். சூளைமேடு மேத்தா நகரை சேர்ந்த சஞ்சீவியும் முடி ஏற்றுமதி செய்து வருகிறார்.

கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோயில் தெருவை சேர்ந்தவெங்கடேசன். விக் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறார். இவர்கள் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு இருந்தது.இதுதொடர்பாக தொழிலதிபர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். அப்போது முடி மற்றும் விக் ஏற்றுமதியில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக, முடி மற்றும் விக் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்து வரும் தொழிலதிபர்களான சவுரி, லோகேஸ்வரன், சஞ்சீவி, வெங்கடேசன் ஆகியோர் வீடுகள் உள்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முடி கொள்முதல் மற்றும் விக் ஏற்றுமதி தொடர்பான ஆவணங்கள், எந்தெந்த நாடுகளுக்கு விக் மற்றும் முடி ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் மூலம் கிடைத்த வருமானம் என்ன, வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யப்பட்ட வருமானம் எவ்வளவு உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றி ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கணக்காய்வு செய்த பிறகு தான் முடி மற்றும் விக் எற்றுமதி மூலம் எத்தனை கோடி சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Enforcement Directorate ,Souri ,Selliyamman Nagar ,Koyambedu, Chennai ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...