×

கொள்ளிடம் பகுதியில் புயலால் 75 சதவீத பயிர் பாதிப்பு என குறைவாக அறிவிப்பு

கொள்ளிடம், ஜன.4: கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ள பாதிப்பு 75 சதவீதம் உள்ளது என குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்திருந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நிரவி மற்றும் புரெவி புயல் காரணமாக அதிக கனமழை பெய்தது. தமிழ்நாட்டிலேயே கொள்ளிடத்தில் தான் அதிக மழை பதிவாகி இருந்தது. இதனால் நெற்பயிர் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. கொள்ளிடம் பகுதியில் 90 சதவீத சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி அழுகி உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிவாரண அறிவிப்பில் பாரபட்சம் நிலவி வருகிறது.

இதுகுறித்து அகர வட்டாரம் பாசன விவசாய சங்கங்களின் தலைவர் ராஜதுரை கூறுகையில், கடந்த புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது. கொள்ளிடத்தில் தொடர்ந்து அதிக மழை பெய்தது. இதனால் பயிர் பத்து நாட்களுக்கு மேல் நீரில் மூழ்கி அழுகிவிட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்நிலையில் அரசு விவசாயிகளுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ளது. சீர்காழி பகுதிக்கு 80 சதவீத பாதிப்பு என்றும் கொள்ளிடம் பகுதிக்கு 75 சதவீத பாதிப்பு என்றும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகம் 90 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் பகுதி 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறைவாக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே பாரபட்சமின்றி அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியாக 80க்கும் மேற்பட்ட சதவீதமாக பயிர் பாதிப்பை அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : area ,Kollidam ,storm ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் வாகன சோதனை தீவிரம்