×

எடப்பாடியிடம் இருப்பது கட்சி அல்ல: அதிமுக உண்மை நிலையை நிரூபிக்க அவகாசம் தேவை; இரட்டை இலை விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும்; தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்

கோபி: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மை அதிமுக அல்ல. அதிமுகவின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும். நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என கூறி தேர்தல் ஆணையத்துக்கு இ-மெயில் மூலம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்களில் பணிகளை தொடங்க கெடு விதித்தார்.

இதையடுத்து செங்கோட்டையன் வகித்து வந்த அதிமுக அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோரின் கட்சி பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள மதுரை சென்ற செங்கோட்டையன், அங்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார். இதனால், கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.

இதையடுத்து கடந்த 1ம் தேதி செங்கோட்டையன் அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது, கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து 53 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் தனக்கு விளக்கம் கேட்டு எந்தவித நோட்டீசும் வழங்காமல் சர்வாதிகாரமாக எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கி இருப்பதாகவும், அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக மட்டுமே உள்ளதாகவும், அவரை பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தன்னை கட்சியை விட்டு நீக்கியது குறித்தும், எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவி குறித்தும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு இ-மெயில் மூலமாக செங்கோட்டையன் புகார் கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், ‘எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுக உண்மையான அதிமுக அல்ல. அதிமுகவின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும். நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் கட்சி, கொடி, சின்னங்களை செங்கோட்டையன் பயன்படுத்தி வருவதை தடை செய்ய வேண்டும் என்று கோபி காவல்நிலையத்தில் எடப்பாடி அணியினர் புகார் அளித்து உள்ள நிலையில், அதிரடியாக அவர் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Edapadi ,Election Commission ,Kobi ,Edappadi Palanisami ,Supreme Court ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...