×

இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு முற்றுகை போராட்டம் அறிவித்த தமுமுகவினர் கைது முன்னெச்சரிக்கையாக காவல்துறை நடவடிக்கை

காரைக்கால்.ஜன.4: புதுச்சேரி மாநிலத்தில் இன்று (4ம் தேதி) 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் தொடங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது . கொரோனா இரண்டாவது அலை உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளை திறந்தால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதால் பள்ளிகளை திறக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளை திறக்க கூடாது என்றும் இல்லையென்றால் திருநள்ளாறு அருகே உள்ள புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாகவும் தமுமுக சமூக நீதி மாணவர் இயக்கம் அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து போராட்டத்திற்கு அனுமதி கேட்பதற்காக நேற்று திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு தமுமுக நிர்வாகிகள் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கத்தினர் சென்றனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய திருநள்ளாறு காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி தரமுடியாது என்று மறுத்து அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். தமுமுக மாவட்ட தலைவர் ராஜா முகமது, சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முகமது ரிபாய், தமுமுக மாவட்ட துணை செயலாளர் சிக்கந்தர் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் அகமது உள்ளிட்ட 15 பேர் திருநள்ளாறு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : opening ,Siege battle ,schools ,police arrest ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா