மகாராஷ்டிராவில் இருந்து நாகை வந்த மின்னணு வாக்கு இயந்திரங்களை பெல் நிறுவன அதிகாரிகள் ஆய்வு

நாகை,ஜன.4: மகாராஷ்டிராவில் இருந்து நாகைக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களின் முதல் கட்ட சோதனையை பெங்களூர் பெல் நிறுவன அதிகாரிகள் சோதனை செய்தனர். சட்ட சபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான 1,890 மின்னணு வாக்கு இயந்திரங்கள், 2 ஆயிரத்து 450 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2 ஆயிரத்து 650 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் இயந்திரங்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 990 இயந்திரங்கள் மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நாகைக்கு கொண்டு வரப்பட்டது.இந்த இயந்திரங்கள் ஏற்கனவே நாகை மாவட்டத்தில் இருந்த 1,325 இயந்திரகளுடன் சேர்த்து நாகையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த இயந்திரங்கள் அனைத்தும் பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட பெல் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் 6 பேர் கொண்ட குழுவினர் முதல்கட்ட சோதனை நடத்தி வருகின்றனர். இதை பிரவின்பிநாயர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மின்னணு இயந்திரங்கள் நாகையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் முதல் கட்ட சோதனை நடைபெறுகிறது. சோதனை முடிந்த பின்னர் இயந்திரங்களுக்கு பிரத்யோக பார்கோடு பொருத்தப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். புதுச்சேரியில் இருந்து அதிகாரிகள் குழுவினர் இங்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் இந்த முதல்கட்ட சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, டிஆர்ஓ இந்துமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் பிரான்சிஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>