×

புதிய நிர்வாகிகளிடம் சாவி ஒப்படைப்பு: வேலூரில் நிதிமுறைகேடு விவகாரம்

வேலூர், ஜன.1: இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் நிதிமுறைகேடு எதிரொலியால் சீல் வைக்கப்பட்டு இருந்த கட்டிடம் மீண்டும் திறந்து புதிய நிர்வாகிகளிடம் சாவியை ஆர்டிஓ கணேஷ் ஒப்படைத்தார். வேலூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் பெறப்படும் நிதி கணக்குகளை தணிக்கை செய்தபோது, அதில் முரண்பாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கலெக்டருக்கு சங்க நிர்வாகம் தொடர்பாக அதன் நிர்வாகிகள் இருவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் தனிப்பட்ட முறையில் சென்றுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். மேலும் ரெட் கிராஸ் நிர்வாக குழுவும் கலைக்கப்பட்டது.

கலெக்டர் உத்தரவுப்படி கடந்த 18ம் தேதி வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க கிளை அலுவலகத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதேபோல் சேவா சமாஜ் அலுவலகம் மற்றும் பெண்கள் விடுதியில் நிதிமுறைகேடு நடந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சங்கத்தையும் கலெக்டர் சண்முகசுந்தரம் கலைத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள சேவா சமாஜ் அலுவலகம், வேலூர் காகிதப்பட்டறையில் உழைக்கும் பெண்கள் விடுதிக்கும் கடந்த 21ம் தேதி சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய நிர்வாகிகள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் நியமனம் செய்யப்படும் நிர்வாகிகளின் பெயர்களை கலெக்டர் அறிவிக்க உள்ளார். இதற்கிடையே ரெட் கிராஸ் அலுவலகம் சீல் வைக்கப்பட்டதால், அந்த அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கியது. இதனால் அந்த அலுவலகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன்படி நேற்று இந்திய ரெட்கிராஸ் அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை ஆர்டிஓ கணேஷ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். பின்னர் அந்த அலுவலகங்களுக்கான சாவியை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளிடம் ஆர்டிஓ கணேஷ் வழங்கினார்.

இதுகுறித்து ஆர்டிஓ கணேஷ் கூறியதாவது: ரெட் கிராஸ் சங்கத்தில் நிதிமுறைகேடு காரணமாக அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அதைதொடர்ந்து சேவா சமாஜ் அலுவலகம், பெண்கள் விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டது. அந்த நிர்வாக குழு முழுமையாக கலைக்கப்பட்டது. தற்போது புதிய நிர்வாகிகள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிதிமுறைகேடு தொடர்பாக தனியாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் ரெட் கிராஸ் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெட் கிராஸ் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டிய அலுவலகம். அதனால் தற்போது கலெக்டரின் உத்தரவின்பேரில் புதிய நிர்வாகிகளிடம் சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இனி அந்த அலுவலகத்தை முறைப்படுத்தி நடத்துவார்கள். சங்கத்திற்கு செயலாளர், துணைத்தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்கள் யார் யார் என்பது குறித்து அந்த பெயர்பட்டியலை கலெக்டர் முறைப்படி அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : executives ,Vellore ,
× RELATED கன்னியாகுமரி சென்டர் பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு