×

பூட்டுத்தாக்கு- திருவலம் செல்லும் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

வேலூர், டிச.21: ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு - திருவலம் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு அடுத்துள்ள பூட்டுத்தாக்கு ஊராட்சியில் இருந்து அன்பூண்டி, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழியாக திருவலத்துக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினமும் வேலூர், சத்துவாச்சாரி, அரப்பாக்கம், பெருமுகை, மேலகுப்பம், ரத்தினகிரி, கீழ்மின்னல் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் ராணிப்பேட்டை சிப்காட், திருவலம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், கூலி வேலைக்கும் என சென்று வருகின்றனர். அதேபோல் இந்த சாலையில் பாலாற்றங்கரையை ஒட்டி இருபுறமும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் உள்ளது. இங்கு மான்கள், குரங்குகள் அதிகளவில் உள்ளன.

இந்த நிலையில் இந்த சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட குப்பைகள் மலை, மலையாக கொட்டப்பட்டுள்ளன. குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடத்தின் அருகே குளமும் அமைந்துள்ளது. சாலையோரம் கொட்டப்பட்டுள்ள இக்குப்பைகளால் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள், பாதசாரிகள் ஆகியோர் துர்நாற்றம், காற்றில் பறந்து வரும் குப்பைகள் மேலே விழுதல், மக்கா குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் வேதனைக்குள்ளாகின்றனர். அதேபோல், விளைநிலங்களிலும் இக்குப்பைகள் காற்றில் பறந்து வந்து விழுவதாக கிராம மக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஊராட்சி நிர்வாகம் சாலையோரம் குப்பைகளை கொட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் னெ்று பூட்டுத்தாக்கு கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Locksmith- Sanitary ,Tiruvalam ,
× RELATED திருடிய 5 பைக்குகளுடன் 2 வாலிபர்கள் கைது திருவலம் அருகே