×

பந்தநல்லூரில் சில மாதங்களுக்கு முன் திறந்த டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட அனைத்து கட்சியினர், மக்கள் முயற்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் கலைந்து சென்றனர்

கும்பகோணம், ஜன. 1: பந்தநல்லூரில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்த அனைத்து கட்சியினர், பொதுமக்கள் திரண்டனர். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர். கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் ரங்கராஜபுரம் கிராமத்தில் மக்களின் எதிர்ப்புகளுக்கு இடையே சில மாதங்களுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சேர்ந்து நேற்று கடையை மூடும் போராட்டம் அறிவித்திருந்தனர்.

இதைதொடர்ந்து நேற்று அப்பகுதி மக்கள் மற்றும் விசி மண்டல செயலாளர் விவேகானந்தன், ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, விவசாய பாதுகாப்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் பாலகுரு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை செயலாளர் சிற்றரசு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் சசிகுமார், ஊராட்சி உறுப்பினர் மாரியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், நீலபுலிகள் இயக்க தலைவர் இளங்கோவன், தீண்டாமை ஒழிப்பு மாநில செயலாளர் சின்னை பாண்டியன், சிபிஐ நிர்வாகி கண்ணையன், அமமுக ஒன்றிய செயலாளர் விஜயபாலன், பாமக ஒன்றிய செயலாளர் கனகராஜ் மற்றும் பல்வேறு கட்சியினர் மற்றும் மக்கள் டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டம் நடத்த திரண்டு வந்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் திருவிடைமருதூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், ஏடிஎஸ்பி ரவீந்திரன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் வராததால் வரும் 2ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அதுவரை கடை மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்சியினர், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : store ,parties ,Tasmac ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!