வாலிபர் மர்மச்சாவு

பேராவூரணி, ஜன. 1: புதுக்கோட்டை மாவட்டம் ஊரணிபுரம் அருகே புதுவிடுதி சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செல்லையா மகன் சுரேஷ் (32). இவருக்கும் ரகுநாதபுரம் கள்ளியடிப்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை மகள் ஐஸ்வர்யா (28)க்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் மனவருத்தம் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில் உள்ள சகோதரி கலாராணி வீட்டுக்கு சுரேஷ் வந்திருந்தார். கடந்த 28ம் தேதி அதிகாலை தனது வீட்டுக்கு செல்வதாக கூறி சுரேஷ் சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு போய் சேரவில்லை. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசில் கலாராணி கடந்த 29ம் தேதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 29ம் தேதி மாலை செருவாவிடுதி அருகே வெட்டிக்காடு ஆத்துப்பாலம் புளியமரத்தின்கீழ் சுரேஷ் சுயநினைவிழந்து கிடந்தது தெரியவந்தது. இந்த தகவல் கிடைத்ததும் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலாராணி சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நினைவு திரும்பாமலே சுரேஷ் இறந்தார். இதையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக சுரேஷ் குடும்பத்தார் கூறியதன்பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>