×

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை துடியலூர் அருகே சுட்டுப்பிடித்தது தனிப்படை போலீஸ்!

கோவை: கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். கோவை சித்ரா பகுதியில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. விமான நிலையத்தின் பின்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு புதர் மண்டி கிடக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பிருந்தாவன் நகர் பகுதியில் மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், ஒண்டிப்புதூரை சேர்ந்த மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் தனது 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் அந்த கல்லூரி மாணவி மற்றும் ஆண் நண்பரிடம் தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து அந்த வாலிபர்கள் கார் கண்ணாடியை உடைத்து திடீரென அரிவாளால் மாணவியின் நண்பரை தலையில் வெட்டி தாக்கியுள்ளனர். அதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் 3 பேரும் அந்த கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அந்த 3 வாலிபர்களும் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அரிவாள் வெட்டில் மயக்கமடைந்த நிலையில் இருந்த ஆண் நண்பர் சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காயம் அடைந்த ஆண் நண்பரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப்பின் இருட்டில் மறைவான இடத்தில் அரை நிர்வாண நிலையில் தட்டுத்தடுமாறியபடி தவித்த கல்லூரி மாணவி கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக அவரையும் போலீசார் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரவு 11 மணிக்கு கல்லூரி மாணவியை வாலிபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். மாணவியின் நண்பர் தகவலையடுத்து அதிகாலை 4 மணியளவில் தான் மாணவியை போலீசாரால் மீட்க முடிந்துள்ளது. இதுகுறித்து அந்த கல்லூரி மாணவி மற்றும் ஆண் நண்பரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் துடியலூர் அருகே 3 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது சுட்டுப்பிடித்தனர். போலீசார் காலில் சுட்டதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துடியலூர் அருகே பதுங்கியிருந்த 3 பேரையும் பிடிக்க முயன்றபோது போலீசாரை அரிவாளால் தாக்கி உள்ளனர். குற்றவாளிகள் தாக்கியதில் காவலர் சந்திரசேகருக்கு இடது கையில் காயம்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்

கைதானவர்கள் குறித்து பரபரப்பு தகவல்
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 பேர் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கைதுசெய்யப்பட்ட 3 பேரும் ஏற்கனவே கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 3 பேரும் மீதும் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. 3 பேரும் வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Independent Police ,Tudyalur ,Goa ,Goa Chitra ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில்...