×

மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் பேச்சு வேதாரண்யத்தில் கிளை சிறைச்சாலை அமைக்க வேண்டும்

வேதாரண்யம், ஜன.1: வேதாரண்யத்தில் கிளை சிறைச்சாலை அமைக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தாசில்தார் அலுவலகத்துடன் அருகருகே காவல் நிலையம், கிளை கருவூலம், கிளை சிறைச்சாலை ஒருங்கே அமைந்து இருந்தது. நாளடைவில் இங்குள்ள கிளை சிறைச்சாலை முற்றிலும் அகற்றப்பட்டு, நாகப்பட்டினம் சிறைச்சாலையுடன் இணைத்து விட்டனர். அதன் பிறகு இன்று வரை வேதாரண்யத்தில் கிளை சிறைச்சாலை அமையவே இல்லை. வேதாரண்யத்தில் நீதிமன்றம் அமைந்துள்ளது. நீதிமன்றத்தில் சரணடையும் குற்றவாளிகள் அல்லது தண்டனை பெற்று குற்றவாளிகள் கிளைச் சிறையில் அடைப்பதற்கு நாகப்பட்டினம் தான் கொண்டு செல்ல வேண்டும். வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தண்டனை பெற்ற கைதிகளை கொண்டு செல்வதும் அவர்களை திரும்ப கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வருவதும் காவல்துறையினருக்கும் கஷ்டமான நிலை இருக்கிறது.

தற்சமயம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் மயிலாடுதுறை, பொறையார், சீர்காழி ஆகிய மூன்று இடங்களிலும் கிளை சிறைச்சாலை அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆனால் நாகை மாவட்டத்தில் மாவட்ட சிறைச்சாலை மட்டும் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. சிலசமயங்களில் மாவட்ட சிறைச்சாலையில் இடம் இல்லாவிட்டால் தண்டனை பெற்ற கைதிகளை மயிலாடுதுறை, சீர்காழி போன்ற கிளை சிறைச்சாலைக்கு தான் அனுப்ப வேண்டியுள்ளது. மேலும் அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அங்கிருந்து வேதாரண்யத்திற்கு அழைத்து வர வேண்டியுள்ளது.

இந்நிலையில் காவல் துறையினர் கைதிகளை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு திரும்ப அவர்களை வேதாரண்யத்தில் இருந்து கிளை சிறைச்சாலைகளில் கொண்டு ஒப்படைக்க மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி வருகிறார்கள். காவல்துறை சார்பில் வாகன வசதி இல்லாத போது, அரசு பேருந்து அல்லது தனியார் வாகனங்களில் தான் அழைத்து செல்ல வேண்டியுள்ளது. இதில் பாதுகாப்பு இல்லை. இதனால் போலீஸ்காரர்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதில் அரசு தனி கவனம் எடுத்து வேதாரண்யத்தில் பண்டைக்காலம் போல் கிளைச் சிறைச்சாலை அமைத்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளன்ர்.

Tags : Deputy Secretary of State ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்