குடியரசு தின விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் ரத்து

காரைக்கால்,ஜன.1: குடியரதின விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காரைக்கால் கலெக்டர் அர்ஜூன் சர்மா அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினவிழாவை நடத்தி வருகிறது. இதை முன்னிட்டு இந்தாண்டு 2021 நடைபெற இருக்கும் குடியரசு தினவிழா சம்பந்தமாக நேற்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், கலெக்டர் அர்ஜூன் சர்மா தலைமையில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை, காரைக்கால் நகராட்சி, தீயணைப்புத்துறை, போக்குவரத்துதுறை சுகாதாரத்துறை, நலவழித்துறை, வட்டார வளர்ச்சி துறை மற்றும் செய்தித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் புதுவை அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் அணிந்து கொண்டும் விழாவை நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது. மேலும் உள்விளையாட்டு அரங்கம் அருகில் விழா நடைபெறும் எனவும் மேலும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக இருப்பதனால் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகிறது எனவும் காவல்துறை அணிவகுப்பு மரியாதை மட்டும் நடைபெறும் என்றும் ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் அலங்கார வண்டிகள் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இக்கூட்டத்தில் துணை மாவட்ட கலெக்டர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், காவல்துறை கண்காணிப்பாளர் (தெற்கு) வீரவல்லவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>