×

கரூரில் இடைவிடாது சாரல் மழை

கரூர், ஜன.1: தமிழகம் முழுவதும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை அவ்வப்போது விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை மாவட்டம் முழுதும் பரவலாக விடாது மழை பெய்த வண்ணம் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், தாந்தோணிமலை சவுரிமுடித்தெரு, வடக்குத்தெரு, வஉசி தெரு போன்ற பகுதிகளில் சாக்கடை வடிகால் பணி முழுமையடையாத காரணத்தினால் குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், கரூர் தாந்தோணிமலை சாலையில் சுங்ககேட் பகுதியில் தரையோடு தரையாக தாழ்வான நிலையில் சாக்கடை வடிகால் உள்ளது. இதன் காரணமாக நேற்று பெய்த மழையினால், சாக்கடை வடிகாலை மறைத்துக் கொண்டு தண்ணீர் சென்றதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லும் வகையில் மணல் மூட்டைகள் வடிகால் ஓரம் வைக்கப்பட்டது.

மேலும், சாக்கடை வடிகால் அடைப்பு காரணமாக சுங்ககேட் சாலை முழுதும் மழைநீரும், கழிவு நீரும் சேர்ந்து சாலையை முழுமையாக மறைக்கும் அளவுக்கு சென்றதால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து, நகராட்சி சார்பில் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாவட்டம் முழுதும் நேற்று பரவலாக விடாது பெய்த மழை காரணமாக, தொழிலாளர்களும், பணிக்கு செல்லும் ஊழியர்களும், குடும்பத்தினர்களும் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் நேற்று நாள் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்ததால் குளித்தலை பகுதியை சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.                          

Tags : Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்