வனத்துறை திடீர் முட்டுக்கட்டை மாஞ்சோலையில் செல்போன் டவர் நிறுவ அனுமதி ஞானதிரவியம் எம்பி கலெக்டரிடம் வலியுறுத்தல்

நெல்லை, ஜன. 1: மாஞ்சோலையில் செல்போன் டவர் நிறுவ வனத்துறை அனுமதிக்க உத்தரவிடுமாறு நெல்லை கலெக்டரிடம் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் கலெக்டர் விஷ்ணுவை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:அம்பை தாலுகாவிற்கு உட்பட்ட மாஞ்சோலை, ஊத்து பகுதிகள் மாவட்டத்தில் தொலைதூரத்தில் ஒதுக்கமாக உள்ள பகுதிகள். இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உரிய தொலைத் தொடர்பு வசதிகள் இன்றி நாள்தோறும் வேதனை அடைகின்றனர். தற்போதுள்ள செல்போன் டவர் குறைந்த அழுத்தம் காரணமாக செல்போன்களில் சரியாக பேச முடிவதில்லை. படிக்கும் மாணவர்கள் இதனால் சொல்லொணாத் துயரம் அடைந்து வருகின்றனர். எனவே மாஞ்சோலை மற்றும் ஊத்து ஆகிய பகுதிகளில் அதிக அழுத்தம் கொண்ட செல்போன் டவர்கள் தேவை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மாணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், சேர்வலாறு மின் திட்டப் பகுதிகளில் 3ஜி செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்றும் நான் கோரிக்கை விடுத்தேன்.

அதன் அடிப்படையில் பிஎஸ்என்எல் நிர்வாகத்தினர் மாஞ்சோலை மற்றும் ஊத்து பகுதிகளில் 3ஜி செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு அங்கு கருவிகளை கொண்டு செல்ல முயன்றனர். அப்போது வனத்துறையினரின் உரிய அனுமதி வழங்கப்படாததால் 3ஜி செல்போன் டவர் நிறுவ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்பு மேலாளர் தங்களுக்கு கடந்த 21ம் தேதி கடிதமும் எழுதியுள்ளார். இது முக்கிய பிரச்னையாகும். மாஞ்சோலை, ஊத்து ஆகிய பகுதி மக்களுக்கும், மாணவர்களுக்கும் 3ஜி சேவை அவசரமான மற்றும் இன்றியமையாததாகும். எனவே இந்த விஷயத்தில் விரைந்து தலையிட்டு மாஞ்சோலை மற்றும் ஊத்து பகுதிகளில் 3ஜி செல்போன் டவர் அமைக்க கருவிகளை கொண்டு சென்று நிறுவ அம்பை வனக்கோட்ட அலுவலருக்கு உரிய ஆணைகள் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே அந்தப் பகுதி மக்கள் நம்மோடு விரைந்து தகவல்கள் அளித்து அனைத்து காரியங்களிலும் பயன் பெற முடியும். இவ்வாறு ஞானதிரவியம் எம்பி தெரிவித்துள்ளார்.மேலும் நாலுமுக்கு எஸ்டேட் கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்த குருவானவருக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கலெக்டரிடம் வலியுறுத்தினார். கிழக்கு மாவட்ட திமுக வக்கீல் அணி முன்னாள் அமைப்பாளர் ஜோசப் ஆரோக்கியராஜ் மற்றும் திமுகவினர் உடன் சென்றனர்.

Related Stories:

>