×

உலக கோப்பையை வென்ற வீராங்கனை கிராந்தி கௌடுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு!

போபால்: மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை வெற்றிக்காக மத்தியப் பிரதேச வீராங்கனை கிராந்தி கௌடுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீசியது. இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 104 ரன்களை சேர்த்தனர். 18வது ஓவரில் மந்தனா (45 ரன்) ஆட்டமிழக்க, 28வது ஓவரில் ஷபாலி வர்மா (78 பந்து, 2 சிக்சர், 7 பவுண்டரி, 87 ரன்) அவுட்டானார். அதன் பின் இந்திய அணி ரன் குவிப்பில் தொய்வு ஏற்பட்டது.

ஜெமிமா ரோட்ரிகஸ் 24, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 20, அமன்ஜோத் கவுர் 12, ரிச்சா கோஷ் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இடையில் வந்து சிறப்பாக ஆடிய தீப்தி சர்மா 58 பந்துகளில் 58 ரன் எடுத்து இன்னிங்சின் கடைசி பந்தில் ரன் அவுட்டானார்.

50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்தது. இதையடுத்து, களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை எடுத்தது. இதனால், இந்தியா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஐசிசியிலிருந்து சுமார் ரூ.40 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பிசிசிஐ அணிக்கு தனி பரிசுத் தொகை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மாநில அரசுகளும் வீரர்களுக்கான பரிசுத் தொகையை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மத்தியப் பிரதேச வீராங்கனை கிராந்தி கௌடுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

“முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்றபோது, ​​மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராந்தி கௌட்-வும் அந்த அணியில் இருந்தார். அவருக்கு வாழ்த்துக்கள். உலகக்கோப்பையை வென்ற அவருக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகையை அறிவிக்கிறேன்” என முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கௌட் 3 ஓவர்கள் மட்டுமே வீசினார். அவர் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார், இருப்பினும் அவர் விக்கெட் எடுக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக கிராந்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்காக அவர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். போட்டியில் விளையாடிய 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags : World Cup ,Veerangai Krandi Gowdu ,Bhopal ,Chief Minister ,Mohan Yadav ,Madhya Pradesh ,Veerangan ,Kranthi Gowdu ,Women's Cricket World Cup ,Women's World Cup ,India ,
× RELATED ஹவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்...