நர்சிங் கல்லூரி விடுதியில் தாளாளர் பாலியல் தொல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் திடீர் தர்ணா

நாகர்கோவில், ஜன.1: கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 13 பேர் நேற்று  நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் பெற்றோருடன் வந்து திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் வந்து மாணவிகளிடம் விசாரித்தனர். பின்னர் மாணவிகள் குமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:  தக்கலை அருகே உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரி 20 வருடமாக மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரத்துடன் செயல்படுவதாக கூறி எங்களை சேர்த்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏழை எளிய மாணவிகளை அந்த பகுதியில் உள்ள தரகர்கள் மூலமாக கமிஷன் கொடுத்து கல்லூரிக்கு அழைத்து வந்து அரசு மருத்துவமனைகளில் வேலைக்கு செல்லலாம், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லலாம் என்று ஆசைவார்த்தைகளை கூறி சேர்க்கை நடத்தியுள்ளனர். மேலும் விடுதி என்று கூறி சிறிய அறையில் 100க்கும் மேற்பட்டவர்களை வைத்து சரியாக உணவு கொடுக்காமல், தகுதியான ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தாமலும் கொடுமைப்படுத்தி வந்தனர்.

கல்லூரியில் லேப், எக்ஸ்ரே, நூலகம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. இது தவிர கல்லூரி தாளாளர் எங்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதை வெளியில் சொன்னால் அசல் சான்றிதழ் தர மாட்டோம், எந்தவித புகாரும் கூறாமல் 2 ஆண்டு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே பள்ளி அசல் சான்றிதழை வழங்குவேன் என்று மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விட்டார். தகுதியான ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்தாமல் a80 ஆயிரத்தை முதல் ஆண்டிலேயே பெற்று கொண்டார். மேலும் மாணவிகளிடம் வகுப்பில் எந்த பாடமும் எடுக்காமல் இரண்டு மாதங்களில் கல்லூரியில் பயிலும் எங்களை தனியார் மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுப்பி ஒவ்வொரு மாணவியருக்கும் சுமார் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை ஊதியமாக பெற்றுக்கொண்டு அந்த ஊதியத்தை தாளாளரும், அவரது மனைவியும் எடுத்துவிடுகின்றனர். கல்லூரி பற்றி விசாரிக்கும்போது எந்தவித அரசு அனுமதியும் இல்லாமல் சட்டவிரோதமாக கல்லூரி இயங்கி வருவது தெரியவந்தது. எனவே மாவட்ட நிர்வாகம் கல்லூரி விடுதிக்குள் நுழைந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வரும் கல்லூரி தாளாளர், அவரது மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவிகளின் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>