சாயல்குடியில் கனமழை நீடிப்பால் அங்கன்வாடி, வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்

சாயல்குடி, ஜன.1:ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், பள்ளமோர்க்குளம், ராமேஸ்வரம், கடலாடி, சாயல்குடி பகுதியில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. இப்பகுதியில் 205.30 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்நிலையில் சாயல்குடியில் கனமழை பெய்தது. இதனால் மாதா ஆலய தெருவிலுள்ள விநாயகர்கோயில் குளம் நிரம்பியது. பழைய பாசி படர்ந்து கிடந்த தண்ணீர், கழிவுநீர் கால்வாய் பகுதியில் தேங்கி கிடந்த கழிவுநீர் ஆகியவை மழைநீருடன் கலந்து அப்பகுதியிலிருக்கும் குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்தது.இதுபோன்று சாயல்குடி பேருந்து நிலையம் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. மயானம், ஆடு, கோழி இறைச்சி, கழிவுநீர், குப்பைகள் கலந்த மழைநீர் அங்கன்வாடி மையத்திற்கு புகுந்தது. இதனை மையத்தின் உதவியாளர் பாத்திரம் கொண்டு வெளியேற்றினார், தண்ணீர் நிரம்பி வழிவதால் வெளியேற்ற முடியாமல் பரிதவிக்கின்றனர். மேலும் அண்ணாநகர், குடிசைமாற்று வாரியம் குடியிருப்பு, தரைக்குடி சாரையோர குடியிருப்பு, சீனி ஆபிஸ் தெரு, வி.வி.ஆர் நகர் உள்ளிட்ட குடியிருப்புகளை கழிவுநீர் கலந்து மழைநீர் சூழ்ந்து கிடக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பொதுமக்கள் இந்த சுகாதாரமற்ற தண்ணீரில் நடந்து செல்வதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.

தற்போது குளிர்காலம் என்பதால் தேங்கி கிடக்கும் தண்ணீரால் அதிக குளிர், கொசுக்கடி ஏற்படுகிறது.  சளி, காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் டெங்கு, கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

தண்ணீர் தேங்கியது குறித்து பேரூராட்சி நிர்வாகம், வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர்.பேரூராட்சி செயல்அலுவலர் சேகர் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை ஜேசிபி இயந்திரம், தூய்மை பணியாளர்கள் உதவியுடன் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையம் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் எளிதில் மழைநீர் புகுந்து விடுகிறது. தரைத்தளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

>