×

மதுரை விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளிடம் ‘சம்திங்’ எதிர்பார்த்து அலைக்கழிப்பு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

கீழக்கரை, ஜன.1: மதுரை விமான நிலையம் வழியாக வளைகுடா நாடுகளில் இருந்து பலர் ஊர் திரும்புகின்றனர். சில மணி நேரங்களில் விமான நிலையத்திலிருந்து ஊர் போய் விடலாம் என்ற ஆர்வத்தில் ராமநாதபுரம்,சிவங்கங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தோர் அதிகளவில் மதுரை விமான நிலையம் வழியே வருகின்றனர். இவர்களில் பெரும் பாலானோர் முன்பு சென்னை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியே வந்தனர். தற்போது மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் பயணிகளை விமான நிலைய நிர்வாகத்தினர் பெரும் துன்பத்துக்கு ஆளாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கொரோனா காலமான தற்போது பல்வேறு சிரமத்துக்கிடையே தொழிலாளர் விடுமுறையில் வளைகுடா நாடுகளில் இருந்து ஊர் திரும்புகிறார்கள். ஆனால் அவர்களை, சுங்க சோதனை என்ற பெயரில் மிக கடுமையான முறையில் நடத்தப்படுவதாகவும், வெளிநாட்டில் உழைத்து வாங்கி வரும் பொருள்களை அக்குவேறு ஆணி வேராக பிரித்து சேதப்படுத்துவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இந்த சோதனையை தவிர்க்க ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை சிலர் கேட்பதாகவும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் விடுமுறை முடிந்து மதுரை விமான நிலையம் வழியாக வளைகுடா நாடுகளுக்கு திரும்பும் போது, கொரோனா பரிசோதனை சான்றிதழ் சோதனை என்ற பெயரில் மணிக்கணக்கில் காக்க வைத்து அலைக்கழித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் மதுரை விமான நிலையத்தில் கொரோனா சான்றிதழ்களை பரிசோதனை செய்யும் நபர் ஒருவர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட பயணிகளை பணம் பெறும் நோக்கத்தில் 2 மணி நேரம் காக்க வைத்ததாகவும், பயணிகள் சத்தமிட துவங்கியவுடன் மற்றொரு அதிகாரி அனைவரையும் சமாதானபடுத்தி டிக்கெட் கவுண்டர் செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது. கீழக்கரை நஜீம் மரிக்கா கூறுகையில், ‘‘வளைகுடா நாடுகளில் பணியாற்றி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆர்வத்தோடு ஊர் வருகிறோம். ஆனால் மதுரை விமான நிலையத்தில் தரப்படும் தொல்லைகளால் ஏன் ஊர் திரும்புகிறேன் என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது. அதேபோன்று பணிக்காக வெளிநாடு சென்ற போது உரிய ஆவணங்கள் இருந்தாலும், எதையோ எதிர்பார்த்து அலைக்கழிக்கிறார்கள். கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆய்வு என்ற பெயரில் ஆன்லைனில் ஒரு நிமிடத்தில் செய்ய வேண்டிய பணியை 2 மணி நேரமாக செய்கிறார்கள்’’என்றார்.விமான பயணி சுல்தான், ‘‘நான் பல ஆண்டு காலமாக வெளிநாட்டில் பணியாற்றி வருகிறேன். சென்னை விமான நிலையம் வழியாக வந்து செல்வேன். மதுரை விமான நிலையம் வந்த பிறகு ஊருக்கு சீக்கிரம் சென்று விடலாம் என்ற அடிப்படையில் இவ்வழியே வருகிறேன். ஆனால் காசுக்காக விமான நிலையத்தில் செய்யப்படும் அடாவடியால் இனி மதுரை விமான நிலையம் வரகூடாது என்றே முடிவெடுத்து விட்டேன். உடனடியாக மத்திய அரசு உரிய அதிகாரிகளை நியமித்து நியாயமாகவும் கண்ணியமாகவும் பயணிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’’என்றார்.

Tags : passengers ,Madurai airport ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...