×

பழநி அதிமுகவில் துவங்கியது கோஷ்டி பூசல் பேரூர் செயலாளரை மாற்ற எதிர்ப்பு கட்சி விலகல் அறிவிப்பால் பரபரப்பு

பழநி, ஜன. 1: முன்னாள முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு முன் அதிமுக பல்வேறு பிரிவுகளை சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதிக்கம் குறைந்து, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஆதிக்கம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின், திண்டுக்கல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளராக நத்தம் விஸ்வநாதன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் தற்போது திண்டுக்கல் சீனிவாசனின் ஆதரவாளர்களாகவே உள்ளதாக தெரிகிறது.     இந்நிலையில் மாவட்ட செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மெல்ல, மெல்ல தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி பழநி அருகே பாலசமுத்திரத்தின் பேரூர் செயலாளராக உள்ள வல்லதரசு மாற்றப்பட்டு, தனது ஆதரவாளர் ஒருவரை (அம்மா பேரவை செயலாளர் சக்திவேல்) நியமிக்க போவதாக தகவல்கள் பரவியது. இதில் ஆத்திரமடைந்த கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் கட்சியில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.   அதில் பாலசமுத்திரம் பேரூர் செயலாளரை மாவட்ட செயலாளர் மாற்றினால், 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைய தயாராக உள்ளதாகவும், இதுதொடர்பாக கழக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொண்டர்கள் வேதனையுடன் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் துவங்கும் முன்பே பழநி அதிமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல்களால் அக்கட்சியின் தொண்டர்கள் பலர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

Tags : Palani AIADMK ,resignation ,announcement ,Perur ,opposition party ,
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...