கோவை, ஜன.1: தமிழகத்தில் 3 கட்டடத்திற்கும் மேல் கூடுதல் கட்டடம் கட்டி மின் இணைப்பு பெற தடை விதிக்கப்பட்டதால் பல ஆயிரம் பேர் தவிப்படைந்துள்ளனர்.கட்டடம் கட்டி முடிந்ததும், உள்ளாட்சி அமைப்புகளிடம் பணி முடிவுற்ற சான்று பெற்று மின் இணைப்பு பெறுவது நடைமுறையில் இருக்கிறது. தற்போது, 3 கட்டடம் கட்டுவதற்கு மட்டும் மின் இணைப்பு வழங்கலாம். அதற்கு பிறகு கட்டடம் கட்டினால் அதற்கு மின் இணைப்பு வழங்க கூடாது என மின் வாரியத்திற்கு நெருக்கடி தரப்பட்டதாக தெரிகிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள், கட்டுமான பணி முடிந்த கட்டடங்களுக்கு மின் இணைப்பு தரலாம் என தெரிவித்து மின் வாரியத்திற்கு கடிதம் அனுப்பியது. பின்னர், உள்ளாட்சி நிர்வாகங்கள் அந்த அனுமதி கடிதங்களை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.3 கட்டடத்திற்கு மேல் கூடுதல் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க மின் வாரியம் முன் வரவில்லை. மாநில அளவில் கடந்த இரு வாரத்திற்கு முன் பணி முடிவடைந்த பல ஆயிரம் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
குறிப்பாக, கோவை நகர், புறநகரில் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் மின் இணைப்பு கோரிய மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. உக்கடம், செல்வபுரம், டவுன்ஹால், குனியமுத்தூர் பகுதிகளை சேர்ந்த கட்டடம் கட்டி முடித்தவர்கள் மின் இணைப்பு வழங்க கோரி மின் வாரிய அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,‘10 ஆயிரம் சதுரடி பரப்பிற்கு மேல், 50 அடி உயரத்தில் கட்டடம் கட்டினால் அங்கே டிரான்ஸ்பார்மர் அமைக்க இடம் ஒதுக்கவேண்டும். வீட்டு கட்டடங்கள் கட்டினால் பணி முடித்த சான்று இருந்தால் போதுமானது. ஏற்கனவே கட்டிய வீடுகளை சிறு அறைகளாக பிரித்து தனித்தனி மின் மீட்டர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், மின் வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மின் இணைப்பு வழங்க திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது சரியல்ல. முறைப்படி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள், மின் வாரியம் இடையே சரியான ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும்’ என்றனர்.கோவை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளர் கலைசெல்வி கூறுகையில்,‘கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு சான்று பெற்ற கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கி வருகிறோம். கட்டி முடிக்காத கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில்லை. சில பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்ட மின் இணைப்புகளை வேகமாக வழங்கி வருகிறோம்’ என்றார்.