×

நீதிமன்றத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற கைதி மீது வழக்கு

ஈரோடு, ஜன. 1: ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராக வந்து தப்பி ஓடிய கைதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் கூத்தியார் குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த குமார் மகன் தமிழ்செல்வன்(25). பெயிண்டர். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் லாட்ஜில் 35 வயது பெண்ணை அழைத்து சென்று, இருவரும் மது அருந்தி உல்லாசமாக இருந்தனர். மது போதையில் மயங்கி கிடந்த பெண்ணின் காதில் இருந்த கம்மலை திருடி விட்டு, அப்பெண்ணை சேலையால் இறுக்கி கொலை செய்தார். இதுதொடர்பாக, ஈரோடு டவுன் போலீசார் தமிழ்ச்செல்வனை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவை சிறையில் இருந்து தமிழ்செல்வனை போலீசார் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அழைத்து வந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி வழக்கை விசாரித்து தமிழ்செல்வனை ஜன.7ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழ்செல்வன் கைவிலங்கை அணிவிக்க போலீசார் சென்றபோது, தமிழ்செல்வன் போலீசார் தள்ளி விட்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி ஓடினார். பின்னர், பாதுகாப்பு போலீசார் தமிழ்செல்வனை விரட்டி சென்று மடக்கி பிடித்து, மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து பாதுகாப்புக்கு வந்த போலீஸ் சண்முகம் (48) ஈரோடு வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தமிழ்செல்வன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : prisoner ,court ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...