×

மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரத்தில், ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் டிசம்பர் 31ம் தேதி வந்து அறை எடுத்து தங்குவது வழக்கம். அதன்படி தங்குபவர்கள் ஓட்டல், ரிசார்ட், தங்கும் விடுதிகள்  மற்றும் பண்ணை வீடுகளில் நடக்கும் கேளிக்கை நிகழ்சிகளை கண்டுகளித்து மகிழ்ச்சியடைவார்கள். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. கற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சேர கூடாது என கடந்த 4 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் கூறினார். மீறினால்,  ஓட்டல்கள் சீல் வைக்கப்பட்டு, உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் நுழைவாயில் அருகே சாலையில் தடுப்புகள் அமைத்து மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் மற்றும் போலீசார் மாமல்லபுரத்துக்கு உள்ளே செல்லும் அனைத்து வாகனங்களையும் தடுத்து  நிறுத்தி தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஓட்டல்களுக்கான பாஸ் இருந்தவர்கள் மற்றும் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க வந்தவர்கள், ஆன்லைன் டிக்கெட் காட்டிய பிறகே அனுமதிக்கப்பட்டனர். மேலும், அறை புக் செய்து, பாஸ் இல்லாமல் வந்தவர்கள், புராதன  சின்னங்களை சுற்றிப் பார்க்க ஆன்லைனில் பதிவு செய்யாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர். அறையை முன்பதிவு செய்தவர்கள் நேற்று இரவு 10 மணிக்குள் வந்து தங்க வேண்டும். 10 மணிக்கு பிறகு வருபவர்களுக்கு அனுமதி கிடையாது.  குறிப்பாக, பாஸ் எடுத்து வந்து காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும், மாமல்லபுரம்  கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை பூஞ்சேரி சுங்கச்சாவடி, புராதன சின்னங்கள் உள்ள பகுதிகள், கடற்கரை மற்றும் முக்கிய வீதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.  மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பார்கள் என ஏஎஸ்பி சுந்தரவதனம் தெரிவித்தார்.

Tags : New Year ,Mamallapuram ,celebrations ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!