சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை விமானநிலைய தனியார் ஒப்பந்த ஊழியர்கள் ஆயிரம் பேர் குடும்பத்தினருடன் விமான நிலைய கார்கோ பகுதியில்  நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, வருகையின்போது தரைப்பகுதி பராமரிப்பு (கிரவுண்ட் ஹேண்டிலிங்) மற்றும் கார்கோ பகுதிகளில் சரக்குகள் ஏற்றி இறக்கும் பணிகள் உள்ளிட்டவைகளை  தனியார் ஒப்பந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர். பத்ரா என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் சுமார் 1,500 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். கொரோனா வைரஸ் ஊரடங்கில் சுமார் 500 தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

இதையடுத்து ஆயிரம் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த  ஒப்பந்த நிறுவனத்திற்கு முன்னதாக ஏற்கனவே இருந்த ஒப்பந்த நிறுவனங்களிலும் இந்த ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் பத்ரா தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் உரிமம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் காலாவதியாகிறது. அதன்பின்பு அந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு உரிமம் நீடிப்பு செய்யவில்லை. ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏஐஏடிஎஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த புதிய நிறுவனம், தற்போதைய தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் , இதுவரை உத்தரவாதமும் கொடுக்கவில்லை.

இதனால் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள கார்கோ பிரிவு மெயின் கேட் முன்பு நேற்று காலை 11 மணியிலிருந்து 11.30 மணி வரை ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த காலங்களில் ஒப்பந்ததாரர்கள் மாறினாலும், ஏற்கனவே பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்ந்தது. அதைப்போல் தற்போதும் தங்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.

Related Stories:

>