×

திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

தூத்துக்குடி, டிச. 31: திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் திரளான பக்தர்கள் ஆருத்ரா தரிசனம் செய்தனர். தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு மணிக்கு பல்வேறு பூக்களால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. 6 மணிக்கு ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து பசு, தாண்டவ தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன. ஆருத்ரா தரிசனத்தை பக்தர்கள் தரிசித்தனர்.  சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு 36 வகையான அபிஷேகம் நடந்தது. ஆருத்ரா தரிசனத்தில் சுவாமி மகா தாண்டவ தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிப்பட்டனர். தொடர்ந்து பெருங்குளம் செங்கோல் ஆதீனம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மதியம் பஞ்சமூர்த்தி சுவாமி வீதிஉலா, இரவு 8மணிக்கு சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.  திருச்செந்தூர்: திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி, சிவன் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோயிலில் 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, திருப்பள்ளி எழுச்சியை தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.

சிவக்கொழுந்தீசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, கோபூஜை நடந்தது. திருப்பள்ளி எழுச்சி, உச்சிகால அபிஷேகம் நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி சோமநாதசுவாமி கோயிலில் திருவாதிரை விழாவை முன்னிட்டு நேற்று ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நடராஜர் சப்பர பவனியும் நடந்தது.  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் நடராஜர் கோயிலில் தேவார பக்த ஜனசபை சார்பில் 130வது ஆண்டு திருவாதிரை விழா நடந்தது. நேற்று பூஞ்சப்பரத்தில் நடராஜர், மாணிக்கவாசகர் வீதிஉலா நடந்தது. ஆறுமுகநேரி விநாயகர் கோயில் தெரு சைவ சித்தாந்த சங்கத்தின் சார்பிலும் திருவாதிரையை முன்னிட்டு நடராஜர் சப்பரபவனியும் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜையும் நடந்தது.  கழுகுமலை:   கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு நடராஜருக்கும், சிவகாமி அம்பிகைக்கும், மாணிக்கவாசகருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், கோ பூஜையை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில், கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏரல்:  ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் அதிகாலை நடராஜர் அருகுசட்ட சேவை, யாகசாலை பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஆனந்தநடராஜர், சமேத சிவகாமசுந்தரிக்கு அபிஷேகமும், கோபூஜை, ஆருத்ரா தரிசனம் நடந்தது. தொடர்ந்து நடராஜர் மாடவீதி உலா, தொடர்ந்து சேர்க்கை  தீபாராதனையை பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

உடன்குடி: பரமன்குறிச்சி பொத்தரங்கன்விளை நாராயணசுவாமி கோயிலில் திருவாதிரை உற்சவவிழாவில் 29ம்தேதி காலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 9மணிக்கு சுவாமி் திருவீதியுலாவும் நடந்தது.
கோவில்பட்டி: வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் சுவாமி சன்னதி முன்பு நடராஜர் அலங்கரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசன பூஜையும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் செண்பகவல்லியம்மன் கோயிலும் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜையை முன்னிட்டு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கோயில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

Tags : Arutra Darshan ,temples ,festival ,Thoothukudi district ,Thiruvathirai ,
× RELATED சுருட்டபள்ளி, வடதில்லை சிவன் கோயில்களில் பங்குனி மாத பிரதோஷ விழா