×

ஜி.டி.நாயுடு பாலத்தில் நாயுடு என்பது ஜாதியின் அடையாளமாக தனித்து பார்க்கவேண்டியதில்லை: கவிஞர் வைரமுத்து!

சென்னை: ஜி.டி.நாயுடு பாலத்தில் நாயுடு என்பது ஜாதியின் அடையாளமாக தனித்து பார்க்கவேண்டியதில்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

கடந்தகாலத்தில்
பெருமைக்குரிய பெரியவர்களின்
பெயர்களோடு ஒட்டியிருக்கும்
பின்னொட்டு
சாதிப்பெயர்கள் என்று
கருதப்படக் கூடாது

அவை
அந்தந்தக்காலப் புழக்கங்கள்
அடையாளங்கள் மற்றும்
ஆகுபெயர்கள்

ஜி.டி.நாயுடுவை
நாயுடு என்றே அழைக்கலாம்

உ.வே.சாமிநாதய்யரை
அய்யர் என்றே விளிக்கலாம்

வ.உ.சிதம்பரம்பிள்ளையைப்
பிள்ளை என்றே வழங்கலாம்

இவற்றுள் எதுவும்
அவர்களின் சாதி அபிமானத்தின்
சாட்சி அல்ல

அதைச் சாதிக்கு மட்டுமான
பெருமிதமாகக் கருதுவதுதான்
சமூகப் பிழை

அப்படித்தான்
பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர்
என்ற பட்டப் பெயரும்

இவை யாவும்
அவரவர் காலத்துக் குறியீடுகளே
அவற்றை அழிப்பதற்கு
நமக்கென்ன உரிமை?

நானோ என் மகன்களோ
சாதிப்பெயர்களை
இட்டுக்கொள்ள மாட்டோம்

என் பாட்டன்களோ
என் தந்தையோ
இட்டுக்கொண்டதை
நாங்கள் எப்படித் தடுக்க முடியும்
அல்லது அழிக்க முடியும்

சாதிக்கு முன்
சாதிக்குப் பின் என்று
இரண்டு காலங்கள் உண்டென்று
வரலாறு வகிர்ந்து சொல்லட்டும்

ஆதலால்,
ஓங்கிச் சொல்லலாம்
தேவர் திருமகன் வாழ்க;
தேவர் திருப்பெயர் வாழ்க;
தேவர் தியாகங்கள் வாழ்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : G.D. ,Poet ,Vairamuthu ,Chennai ,Poet Vairamuthu ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...