நில அளவையாளர்கள் மூலமாக விரைந்து பட்டா வழங்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம், டிச. 31: ஜெயங்கொண்டத்தில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொது செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலம், மனை, வீடு ஆகியவற்றை பத்திரப்பதிவு செய்தவுடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்து நில அளவையாளர்கள் மூலமாக விரைவாக பட்டா வழங்க வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படும் வரை ஏற்கனவே உள்ள குப்பை தொட்டிகளை வைத்து சேகரிக்க வேண்டும். அதுவரை வசூலித்து வரும் குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளில் முழுமையான நெட்வொர்க் செயல்படும் காலம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையையும், செல்போன் ஓடிபி முறையையும் கைவிட்டு பழைய முறையில் கார்டின் அடிப்படையில் பொருட்களை வழங்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஆட்டோ ஸ்டாண்டுகளை முறைபடுத்தி குறிப்பிட்ட இடங்களில் அமைத்து பயணிகளுக்கு பயனுள்ளதாக அமைக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களை போக்குவரத்து போலீசார் சீரமைத்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். அரசு இ சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்தி கட்டண தொகைக்கான விளம்பர பலகை அமைக்க வேண்டும். ஒரே வளாகத்துக்குள் அமைந்துள்ள தாசில்தார் அலுவலகம், நீதிமன்ற வளாகம், சார்நிலை கருவூல வளாகத்தில் கட்டண கழிவறை அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவியர் விடுதிகளில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் முறைகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டத்தில் உறுப்பினர்கள் சந்திரசேகரன், தனபால், பாரிவள்ளல், முகம்மது சுல்தான், சின்னசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>