அரியலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் கலெக்டர் ஆய்வு

அரியலூர், டிச.31: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறையின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.

சென்னை தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுரையின்படி, அரியலூர் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பணியின்போது, 34 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 63 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி பழுது என கண்டறியப்பட்டது. மேற்படி பழுதான இயந்திரங்களை பெங்களூர் பாரத் மின்னணு நிறுவனத்திற்கு அனுப்பும் பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் இருப்பு அறை திறக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த ஆய்வில், பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி, பேலட் யூனிட் உள்ளிட்டவைகள் பாதுகாப்பாக உள்ளனவா என்று ஆய்வு செய்யப்பட்டு, அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மீண்டும் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஜெ.பாலாஜி (நிலம்), ரவிசந்ந்திரன் (பொது) மாவட்டதேர்தல் தாசில்தார் குமரய்யா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>