அரியலூர் மாவட்டத்தில் இன்று இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது

அரியலூர், டிச. 31: அரியலூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது. பொது இடங்களில் கூட்டம் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரத்னா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவானது பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதுபோன்ற இதர இடங்களில் இன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. மேலும் இன்று இரவு முதல் அனைத்து சாலைகளிலும் கூடுவதற்கு வாய்ப்புள்ளதால் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கொரோனா நோய் தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே அரியலூர் மாவட்டத்தில் இன்று இரவு நடத்தப்படும் 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களான அதிவேகத்தில் இயக்கி கொண்டு வீதிகளில் அதிக இரைச்சல், சத்தத்துடன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக செல்லுதல், பொது இடங்களில் அதிகமான நபர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டமாக கூடுதல், கேளிக்கையாக வாணவெடிக்கை மற்றும் பட்டாசுகளை பொது இடங்களில் வெடித்தல் மற்றும் அதிக சத்தத்துடன் கூடிய பாடல் மற்றும் இசையை ஒலிக்க செய்தல் போன்றவைக்கு அனுமதியில்லை. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்று ஏற்படாதவாறு முககவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடித்து அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>