×

ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றினால் கோயில் நிலங்களை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை விளக்கம்

சென்னை: கோயில் நிலங்கள் குறித்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் முறைகேடாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தெளிவுபடுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்கள் தொடர்பான டெண்டர்கள், ஒப்பந்தங்கள் நிலங்கள் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், ஆஜராகி கோயில் சொத்துகள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, வருவாய் துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளம் உள்ளது. அந்த இணையதளத்தில் நிலத்தின் வகைப்பாடு குறித்து அனைத்து விவரங்களும் உள்ளன. இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். ஏற்கனவே, முதல் அமர்வு முன்பு இதேபோல் தொடரப்பட்ட வழக்கு உள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோயில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது. இதுதொடர்பாக ஒரு முறையான திட்டம் கொண்டு வர வேண்டும். இந்த மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 12ம் தேதி தள்ளிவைத்தார்.

Tags : Hindu Charitable Trusts Department ,Madras High Court ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து