சென்னை: சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்துவிட்டு செல்வது வழக்கம். வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 12 நீர்யானைகளில் ஒரு நீர்யானை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குட்டியை ஈன்றது. இதில் குட்டியையும், தாயையும் சேர்த்து பூங்காவில் உள்ள மருத்துவமனை ஊழியர்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும், அதற்கு உண்டான சத்தான உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் நீர்யானை 3 குட்டிகளை ஈன்றுள்ளது. இதேபோல், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள காட்டெருமை ஒன்று நேற்று காலை 2 குட்டிகளை ஈன்றுள்ளது. இதனை பூங்கா மருத்துவமனையில் உள்ள மருத்துவ குழுவினர் மற்றும் காட்டெருமை பராமரிப்பாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குட்டி ஈன்ற காட்டெருமையும், குட்டியும் நலமாக உள்ளதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
