காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர், டிச. 31: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை வகித்து, கரூர் மாவட்டத்தின் 8 ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் அலுவலகத்தில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். கூட்டத்தில், வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, வட்டார விரிவாக்க மையங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர் அனைவரின் கோரிக்கையும் கேட்டறிந்த கலெக்டர் பேசியதாவது:

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிகளவிலான நபர்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் காணொலி காட்சி மூலமாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பை ஏற்று வட்டார விரிவாக்க மையங்களில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை வைத்துள்ளனர். உங்களின் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் படும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைக்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து, வேளாண்மைத்துறை, தோட்டகலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, விற்பனை வணிகத்துறை போன்ற விவசாயிகள் சார்ந்த துறைகளின் செயல்பாடுகள், விவசாயிகளுககு தேவையான பொருட்கள் இருப்பு போன்றவை குறித்தும் பேசினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வேளாண் இணை இயக்குநர் சிவசுப்ரமணியன், கால்நடை பராமரிப்புத்துஐற இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஹஸ்ரத்பேகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மணிமேகலை உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>