×

கழிவுநீர் கால்வாயில் கிடந்த பழங்கால கல்தூண் மீட்பு: அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாய் மீது, அரிய பொக்கிஷங்களான பழங்கால கருங்கல் தூண் போடப்பட்டு கிடந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் புகைப்படம் வெளியானது. இதைதொடர்ந்து, அதிகாரிகள், அங்கு சென்று, அந்த தூணை எடுத்து சென்றனர். காஞ்சிபுரம், பஞ்சுப்பேட்டை மின்வாரிய அலுவலகம் பின்புறம், கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்க்கு கரை அமைக்கவும், அருகில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு கால்வாயை கடந்து செல்லவும் பழங்கால கருங்கல் தூண் பயன்படுத்தப்பட்டது. அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய இந்த தூண், கோயில்களை புனரமைக்கும்போது, இங்கு வீசப்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் பல்வேறு துறை அதிகாரிகள், இதனை கண்டும் காணாமல் உள்ளனர் என நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் புகைப்படம் வெளியானது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று, மேற்கண்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு வந்த பொதுமக்கள், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இரட்டை திருமாளிகை புனரமைப்புக்காக இடித்தபோது, அங்கிருந்த கருங்கல் தூண்களை அகற்றி முறையாக பாதுகாக்கவில்லை. அதனால், ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில் உள்ள, இரட்டை திருமாளிகையில் இருந்த தூண்களாக இருக்கலாம் என கூறினர். இதையடுத்து, அறநிலையத் துறை இணை ஆணையர் லட்சுமணன், கோயில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், குமரன், அறநிலையத் துறை கட்டுமான பணி உதவி பொறியாளர் குமரகுருபரன் ஆகியோர் அங்கு சென்று, கால்வாய் மீது வீசப்பட்டு கிடந்த கருங்கல் தூணை ஆய்வு செய்தனர். அதில், 7ம் நுாற்றாண்டை சேர்ந்த, மணல்கல் வகையை சேர்ந்தது என தெரிந்தது. பின்னர், அந்த தூணை கைப்பற்றி பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த இடத்தில், பழங்கால மண்டபம் இருந்திருக்கலாம். இடிந்த மண்டபத்தில் இருந்து, கருங்கல் தூண்களை அகற்றி, கால்வாய் மீது போட்டிருக்கலாம். எனவே, தொல்லியல் துறை ஆய்வுக்குப் பின் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags : Recovery ,sewer canal ,Treasury ,inspection ,
× RELATED ராசிபுரம் அருகே ரூ.7 கோடி மதிப்பிலான...