குளிர்காலம், பனியால் நெல் பயிரில் குலைநோய் தாக்குதல் தடுப்பது எப்படி?

சின்னமனூர், டிச.31:தேனி மாவட்டத்தில் குளிர்காலமான தற்போது நெற்பயிர்களில் பனித்துளி அல்லது நீர்தவளைகள் படிந்து குலை நோய் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க வேளாண்மை துறையினர் வழங்கியுள்ள ஆலோசனைகள் வருமாறு:

தழைச்சத்து உரங்களான யூரியா, அமோனியம் குளோரைடு, டி.ஏ.பி அதிக அளவில் பயன்படுத்தினால் குலை நோய் ஏற்படும். குலை நோய் முதலில் கண் வடிவ புள்ளிகளாக தோன்றும். புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும், ஓரம் பழுப்பு நிறமாகவும் இருக்கும். விரைவில் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இலை முழுவதும் பரவி இலை கருகி விடும். தீவிர தாக்குதலுக்கு உள்ளான பயிர் தீப்பிடித்து கருகியது போன்று காணப்படும். கதிர் காம்பு பகுதியில் கருப்பு நிற புள்ளி தோன்றி அழுகி கதிர் குலை முறிந்து தொங்கும். நெல் மணி பதராகி விடும்.

குலை நோய் வரும்முன் தவிர்க்க சூடோமோனஸ் 0.2 சதம் கரைசலை ஒரு லிட்டருக்கு இரண்டு கிராம் அல்லது எக்டேருக்கு இரண்டரை கிலோ வீதம் நடவு செய்த 45-19 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். குலை நோய் தோன்றிய பின் தழைச்சத்து கொண்ட உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும்.நோயை கட்டுப்படுத்த மருந்தினை தெளித்தபின்தான் தழைச்சத்து இட வேண்டும். அப்படி இடும் போது வேப்பம் புண்ணாக்கு கலந்து இட வேண்டும். தேவையான தழைச்சத்து பிரித்து இரண்டு, மூன்று முறைகள் இட வேண்டும். குலைநோயினை கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு கார்பன்டசிம் 500 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 75 டபிள்யூ.பி.,500 கிராம் வீதம் பயிர் முழுவதும் படும்படி தெளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர், வேளாண்மை அலுவலர் மற்றும் வட்டார வேளாண்மை அலுவலகத்தை அணுகி தீர்வு காணலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>