×

பெரியகுளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை காவல் துணை கண்காணிப்பாளர் அறிவிப்பு

பெரியகுளம், டிச.31:பெரியகுளம் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியில் கடந்த புத்தாண்டு இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மோதல் ஏற்பட்டு இறுதியில் கொலையில் முடிந்தது. இதனால் இந்த ஆண்டு பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் பொது இடங்களில் இளைஞர்கள் ஒன்று கூடி ஒலி பெருக்கிகள் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிப்பதாக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவித்தார். இது தொடர்பாக பெரியகுளம் பகுதியில் உள்ள அனைத்து சமுதாய மற்றும் கிராம தலைவர்கள் மற்றும் ஒலி பெருக்கி உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்  காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் கூறுகையில், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒலி பெருக்கி உரிமையாளர்கள்  புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஒலி பெருக்கிகளை அமைத்தால் ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். ஊர் மற்றும் சமுதாய தலைவர்கள் தங்கள் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதாக இருந்தால் அவர்களுக்கு எடுத்து கூறி தடை செய்ய வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை என்ற தகவல் கிராமங்கள் தோறும் ஆட்டோக்களில் ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புத்தாண்டு வன்முறை இல்லாத புத்தாண்டாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்

Tags : Deputy Superintendent of Police ,New Year ,Periyakulam ,celebrations ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!